மகாராஷ்டிர அரசிடம் இருந்து 200 சொகுசுப் பேருந்துகளைத் தயாரித்து வழங்குவதற்கான ஆர்டரை வால்வோ பஸ் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியாவில் வால்வோ பேருந்துகளுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய ஆர்டர் இதுவாகும்.
மகாராஷ்டிர அரசுப் போக்குவரத்துக் கழகம் தனது நீண்டதூரப் பேருந்து சேவைகளை மேம்படுத்தி வரும் நிலையில், வால்வோ நிறுவனத்துடன் 200 பேருந்துகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில், 170 இருக்கை வசதி கொண்ட பேருந்துகளும், 30 படுக்கை வசதி கொண்ட பேருந்துகளும் அடங்கும். மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்கள், பிற மாநிலங்களுக்கு இடையிலான வழித்தடங்களில் இவை இயக்கப்பட உள்ளன.புதிய 9600 மாடல் பேருந்துகள் வால்வோ நிறுவனத்தின் பெங்களூரு ஹோஸ்கோட் ஆலையில் தயாரிக்கப்படுகின்றன. படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இரவு நேரப் பயணங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு, பயண வசதி மற்றும் நம்பகத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து இந்தப் பேருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளதாக வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வால்வோ இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் நிறுவனத்தின் பேருந்துப் பிரிவு செயல் துணைத் தலைவர் சுரேஷ் கூறும்போது, "பயண அனுபவத்தை மேம்படுத்துவதிலும், உயர்தரப் பயண வசதிகளை மக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்வதிலும் இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியை இந்த ஒப்பந்தம் வெளிப்படுத்துகிறது" என்றார்.